பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு..!
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20 சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா திட்டமிட்டிருந்தது.
பீஃபா தலைவர்
ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம் அண்மையில் கைவிடப்பட்டது.
முன்னதாக, இன்பான்டினோவிற்கு அளித்து வந்த ஆதரவை முறைப்படி திரும்பப் பெறுவதாக வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சிறந்த நிர்வாகமின்மை, தவறான தலைமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகிய காரணங்களால் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு முதல் ஃபீஃபா தலைவராக இருக்கும் இன்பான்டினோ, 2027 முதல் 2031 வரையிலான அடுத்த தவணைக்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மீண்டும் தலைவராவதில் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.