மின் கட்டணக் குறைப்பு: முன்னாள் அமைச்சர் விடுத்துள்ள சவால்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வலுசக்தி மாபியாக்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் மாபியாக்களே இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் ஆட்சி கவிழ்ப்பில் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறிருப்பினும் எமது நாட்டிலுள்ள சூழலியல் நிபுணர்களுக்கு இவர்களை எதிர்ப்பதற்குள்ள தைரியம் பாராட்டுக்குரியது.
வர்த்தகர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர். வலுசக்தி துறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளை மீட்டிப்பார்த்தால் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மின்சார திருத்த சட்டத்தில் முன்னர் காணப்பட்ட 'ஆகக்குறைந்த கட்டணம்' என்ற சொல் 'நியாயமான கட்டணம்' என மாற்றப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவும் மாபியாக்களின் செயற்பாடே.
மின் துண்டிப்பு
சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்பை ஒவ்வொரு பிரஜைகளும் சுயாதீனமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இலங்கை மின்சாரசபையின் இருப்பு கேள்விக் குறியாகிவிடும்.
அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மின் துண்டிப்பு தொடர்பில் மின்சாரசபையால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் யாரையும் பாதிக்காது.
எனவே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |