பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் வீழ்ச்சி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் போனால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார ஆய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ, அண்மையில் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.

தற்போதைய பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைக்கூட எட்டவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்யுயும்போது, ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி விகிதம், இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமற்ற போக்கு எனலாம். குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (சுமார் 3,029.8 பில்லியன் ரூபா), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (3,121.5 பில்லியன் ரூபா) விட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகவே உள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
இரண்டாவது காலாண்டில் துறைரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும்போது, விவசாயத் துறை 2.3 சதவீதம் சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் நெல் உற்பத்தி 15.1 சதவீதமும், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் கிட்டத்தட்ட 15 சதவீதமும் குறைந்துள்ளன.
நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி
தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக கட்டிட கட்டுமானத் துறை (13.9மூ) மற்றும் சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறை (17.4மூ) ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது.

சேவைத் துறை சராசரியாக 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் மந்தநிலை, சாமானிய மக்களின் வருமான ஆதாரங்களையும் ஊதியங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.
இது வறுமையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
மேலும், இது சர்வதேச கடன் மதிப்பீடுகளில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக அமையும். நாடு எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைக் கடக்க, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நீண்ட காலத்திற்கு 6 முதல் 7 சதவிகித அளவில் பராமரிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தாண்டிய விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சீர்திருத்தங்கள், குறிப்பாக காணிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறையில் செயல்திறன் மேம்பாடுகள் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.