இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் |
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் இந்த காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து துறையினருக்குமான அறிவிப்பு
அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் முறையாக எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிப்பதற்கான முறையான திட்டமொன்றை வகுத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள்
கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை மூடப்படும்.
ஏனைய, பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பேருந்துகள்
போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது சங்கத்தின் பேருந்து சேவைகள் இன்றைய தினம் இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.
புகையிரதங்கள்
இன்றைய தினம் வழமையான கால அட்டவணையின் கீழ் புகையிரதங்கள் இயக்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அநேகமாக இடைநிறுத்தப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேபோல், எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை குறுந்தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் ஊடாக வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்காக பொறிமுறையானது ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று முதல் 3 வாரங்களுக்கு பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்களை அதிகரிப்பதற்கான பிரேரணையை இன்று முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள்
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் டொக்டர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை. இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் |
அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதும், அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்சினைகள் உள்ளன.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.