மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டிற்கான கட்டணங்களை 82% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) அனுமதியை கோரியுள்ளது.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, நுகர்வோருக்கு சலுகையாக கட்டண உயர்வு 57% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் |
டொலரில் மின் கட்டணம்
தமது வருமானத்தில் 60% க்கும் அதிகமான பங்கு அந்நியச் செலாவணி ஈட்டும் தனியார் அல்லது அரச நிறுவனங்கள், எதிர்காலத்தில் மாதாந்த மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்தும் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை மின்சார சபைக்கு அந்நியச் செலாவணியில் ஏற்படும் எந்தவொரு செலவுகளையும் ஈடுசெய்ய இந்தக் கட்டணத்தை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திருத்தப் பணிகளுக்கு ஏற்கனவே 4 - 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாகவும், அதற்கான கொடுப்பனவை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியேற்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஏற்பாடுகளால் குறித்த செலவுகளில் இலங்கை மின்சார சபைக்கு ஓரளவு பங்களிப்பை வழங்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் 610 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு
அத்துடன், மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில், பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (28) முதல் 3 வாரங்களுக்கு, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், பொதுமக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், நாளை முதல் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (www.pucsl.gov.lk) உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.