சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஒட்டுமொத்த அளவிலான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் உலகளவில் விசாரணை நடத்தும் இந்த சர்வதேச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமையவுள்ளது.
பொருளாதாரத்தை முடக்கத் திட்டம்
இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தொடர்பான கடந்தகால விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே முழு அமைப்பையும் இலக்குவைத்து பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள், காப்பீட்டு நடைமுறைகள், விசாரணை அதிகாரிகளை நியமித்தல் மற்றும் அமெரிக்க ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிதியியல் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.