இரண்டாவது நாளாகவும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் மழை காரணமாக தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வான்கதவு திறப்பு
இதனையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பகுதிகளான கொத்மலை ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

