கொங்கோவில் எபோலா - போர் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
மக்களாட்சிக் குடியரசு கொங்கோவின் (DRC) கிழக்குப்பகுதியில் நிலவி வரும் ஆயுதமேந்திய போரானது, அங்கு பரவி வரும் எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொங்கோவின் இத்துரி மாகாணத்தில் எபோலா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விடப் போரின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும், நோய் மற்றும் போர் ஆகிய இரண்டும் இணைந்து ஒரு 'பேரழிவு மோதலை' ஏற்படுத்தியிருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
வைரஸின் உண்மையான பரவல்
கடந்த மே 15 அன்று கொங்கோவில் எபோலா பரவல் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 220 சந்தேகத்திற்குரிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்தோடு 900 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், வைரஸின் உண்மையான பரவல் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என ஐநா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் எபோலாவின் 'புண்டிபுகியோ' வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ இல்லாததால், இந்தத் தொற்றைத் தடுப்பது முற்றிலும் மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைவதைப் பொறுத்தே உள்ளது என்று டெட்ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் குண்டுவீச்சு மற்றும் மோதல்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதமேந்திய குழுக்களின் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கொங்கோவின் கிழக்குப்பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், மருத்துவக் குழுக்களின் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

தொடர் குண்டுவீச்சுகள் மற்றும் மோதல்களால் மக்கள் முகாம்களில் அடைக்கலம் புகுந்து வருவதால் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் நோயாளிகளைக் கண்காணிப்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளது.
இதனால், எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தவும், மருத்துவக் குழுக்கள் பாதுகாப்பாகச் செயல்படவும் போரிடும் அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பின்னர் கொலை அச்சுறுத்தல்கள்..! சமூக செயற்பாட்டாளர் வெளிப்படுத்திய உண்மைகள்
ZJBWSCO