பல்வேறு கோரிக்கைகளுடன் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில்(Batticaloa) கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் முன்பாக நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் சம்பள அதிகரிப்பு, ஊழியர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு, போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி சாரா ஊழியர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில்,
“அனைத்து அரச பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களும் சம்பள உயர்வுகோரி போராடிக் கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு தரப்புகளால் பல தடவை பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு உடன்பாடு காணப்பட்ட இந்தப் பிரச்சினைக்கு கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஊடாக தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம்.
எனினும், அந்தக் கூட்டத்தில் சம்பள உயர்வு குறித்து ஆராயும் குழு ஒன்றை அமைக்கும் தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதுடன் இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கையானது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து அதை இன்னும் காலம் கடத்தும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
மாணவர்களின் கல்வி நலன்கருதி தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு பணிக்கு மீளத் திரும்புமாறு 29 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்களின் நலன் குறித்து பேசும் ஆணைக்குழு தலைவர் பல்கலைக்கழக கட்டமைப்பின் தூண்களாக செயற்படும் அந்த போதனை சாரா ஊழியர்கள் விடயத்திலும் அக்கறை கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |