சனல் - 4 காணொளி: கேள்விகளும் சந்தேகங்களும்
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருகிறது.
2015 ஜனவரியில் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் இதனைக் கன கச்சிதமாகச் செய்திருக்கிறது.
அதற்கேற்ப 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழி சமைத்துமுள்ளது. இதனையே சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆவணப்படம் சித்தரிக்கிறது.
தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகங்கள் வருமாறு
1) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போருக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை சனல் 4 தொலைக்காட்சி முறைப்படி வெளியிட்டதா?
2) ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் வரையும் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ்-முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்கு அமெரிக்க - இந்திய அரசுகளும் ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பியதா?
3) இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பளத்துக்குப் பணியாற்றினர் என்பது பரகசியம்.
4) ஜெனீவா மனித உரிமைச் சபை ஆரம்பமாகவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் அவ்வப்போது போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காடசிக்கு, 2009 இற்குப் பின்னரும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கில் மேற்கொண்டு வரும் அச்சறுத்தல்கள் மற்றும் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரியாதா?
5) போர்க் குற்றம் பற்றியும் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்தும் வெளிப்படுத்திய ஆர்வம், 2009 மே மாதத்திற்குப் பின்னரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதிகள் பற்றி ஏன் இல்லாமல் போனது?
ஆகவே மேற்குலக நாடுகளின் தேவைக்கும் புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கிலும் சனல் 4 தொலைக்காட்சி செயற்படுகிறது என்று கூறலாமா?
ஏனெனில், ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார்.
சர்வதேச விசாரணை
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். ஆகவே சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்கள மதத் தலைவர்கள் எல்லோருமே 2009 போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றதல்லவா?
மேற்கு நாடுகளின் தேவையென்ன? இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று இயங்குகின்றன.
வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம். ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்துமா?
ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது. தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெவ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய ”மூலங்கள்” சனல் 4 தொலைக் காட்சிக்குத் தெரியாததல்ல.
ஆனால்?...