இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்
சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
2019ஆம் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தி, பிரித்தானியாவில் உள்ள சனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அம்பலப்படுத்தப்பட்ட சதித்திட்டங்கள்
இந்தப்படத்தில், தற்போதைய இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய ஆசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் உருவாக்கிய குழு, பிள்ளையான் அவர்கள் இணைந்து தீட்டிய சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இந்த காணொளியில் அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த காணொளி இலங்கை அரசியலில் பரபரப்பான நிலையை தோற்றுவித்துள்ளதுடன், இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது.
என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது.
தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும்,
இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - இலக்குகளுக்குரிய அனுப்புதல்கள் எனும் அர்த்தப்படுத்தலிலான ஆவணப்பதிவொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானிய ஊடகமான சனல்-4 வெளியிட்டிருந்தது.
இந்த காணொளியில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான கன்சீர் அசாத் மௌலானா, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுவதை இலக்காக கொண்டு உயிர்த்த ஞாயிறு சதி நடவடிக்கையை அரங்கேற்றியதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராஜபக்சக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்த சனல்-4 ஊடகம் தற்போது மீண்டும் அதன் பணியை தொடருவதாகவும் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது
ராஜபக்சக்களின் வரலாற்றில் கரும்புள்ளிகளை உருவாக்கும் நோக்கில் குறித்த ஊடகம் இந்த ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தம்மை ஜனாதிபதியாக்கும் நோக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியில் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாண்டி, தமது ஆட்சிக் காலத்தின் போது கத்தோலிக்க சமூகத்தினருடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சேதமடைந்த தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை மீண்டும் நிர்மாணிக்க தாம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை பாப்பரசர் மேற்கொள்வதற்கும் தாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, ராணுவத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளதோடு, அவர் தமக்கு விசுவாசமான ஒரு அதிகாரி என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வரை சுரேஷ் சலேவுடன் தாம் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுரேஸ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயல்பாடுகளில் அவர் தலையிடவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தாம் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சுரேஸ் சலேயை தொடர்பு கொண்டு, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுரேஸ் சலே குண்டுத்தாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள் என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியாக தாம் பதவியேற்றதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்தியதாக சனல்-4வால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதென கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |