பிரித்தானியாவில் E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி: எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் மக்கள்
பிரித்தானியாவில்(United Kingdom) மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் உணவு பொருள் ஒன்றில் E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் மில்லியன் கணக்கான மக்கள் அச்சமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் பரவலாக விநியோகிக்கப்படும் உணவுப் பொருளுடன் தொடர்பு படுத்தி அரசாங்கம் தரப்பில் கடந்த வியாழக்கிழமை(06) அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
எனினும், எந்த உணவு பொருள் என இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
E. coli பாக்டீரியா பாதிப்பு
இதனிடையே பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 113 பேருக்கு STEC எனப்படும் E. coli பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இளையோர் மத்தியிலேயே பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 2 வயது முதல் 79 வயதுடையவர்கள் E. coli பாக்டீரியா பாதிப்புடன் மருத்துவமனையை நாடியுள்ளனர்.
அத்துடன், மே 25 ஆம் திகதிக்கு பின்னரே அதிக எண்ணிக்கையிலான E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் பிரித்தானியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் உணவில் இருந்தே பரவியிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
மக்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும், உணவு பண்டங்களை உரிய முறையில் சமைக்கிறோம் என்பதையும் மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், எவரேனும் உணவு நஞ்சாதல் (food poison) அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப்போக்குடன் உடல்நிலை சீரில்லாமல் இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பாடசாலை அல்லது அலுவலகத்திற்கு 48 மணி நேர விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதுடன் சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் காணப்படுபவர்கள் உணவு சமைக்க முயல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |