தெற்கு கடற்பரப்பில் மீன்பிடிப் படகிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, பலநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 102 பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (11.11.2026) அதிகாலை பதிவாகியுள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றல்
இந்த நடவடிக்கையில், 50 பொதிகள் ஐஸ் போதைப்பொருளும் 52 பொதிகள் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த படகு மற்றும் அதிலிருந்த ஐந்து கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுடன் கடலுக்குச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடையைக் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.