வெகுவாகக் குறைந்து வரும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக மத்திய மலை நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகின்றன என மின்சார துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்காலகட்டத்தில் வெப்பம் என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுவதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக தாழ் இறங்குவதாக மின்சார துறைசார் அதிகாரிகளினால் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மின் உற்பத்தக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வரும் நீர்த்தேக்கங்களான மவுசாக்கலை மற்றும் காசல்றி நீர்த்தேக்கங்களில் கடந்த காலங்களுக்கு மாறாக நாளொன்றுக்கு 3 அடி தாழ் இறங்குவதாக இந்த நீர்த்தேக்கங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுபடுத்தப்பட்ட நீர்விநியோகம்
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து மவுசாகலை நீர்தேக்கத்தில் நீர் தாழ் இறங்கி நீர் மூழ்கிய மஸ்கெலியா பழைய நகரம் கதிரேசன் கோயில், பள்ளிவாசல், புத்தர் நிலை ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளன.
இதேநேரம், ஹட்டன் மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் நகர சபை பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதுடன் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அதிகார சபையினால் வலியுறுத்தப்படுகின்றது.
இதனால், ஹட்டன் நகரில் உள்ள பல ஹோட்டல்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு நீருக்காக 1800 ரூபா செலவிட்டு வாகனங்கள் ஊடாக நீரினை பெற வேண்டியுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 அடி தாழிறக்கம்
எனவே, நீரின் தேவை அதிகமாக காணப்படுவதனால் நீரினை வீண் விரையமாக்காது மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பல நீர் போசன பிரதேசங்களில் அமைந்து வளமான வனப்பிரதேசங்கள் தீயினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் நீர் நிலைகள் பாரிய அபாயத்தினை சந்தித்துள்ளதாக சூழ்ல் பாதுகாவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ஒரு அடி தாழ் இறங்கிய நீர் இப்போது நாள் ஒன்றுக்கு 3 அடி தாழிறங்குகிறது இதனால் வலைகள் விரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்களின் தொழில் பாதிகக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை நீர் போசன பிரதேசங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்காததன் காரணமாக சிறிய நீர் மின்பத்தி நிலையங்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சிறிய நீர் மின் உற்பத்தி நிலைய பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |