விடுதி ஒன்றிற்குள் கூடியிருந்த இளைஞர்கள்.. அதிரடியாக உள்நுழைந்த பொலிஸ் அதிகாரிகள்
நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுடுகல அருவிக்கு அருகில் உள்ள வாடகை விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றை முற்றுகையிட்ட நாவலப்பிட்டி பொலிஸார், 12 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்களை ஒன்றிணைத்து உள்ளூர் வாலிபர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்ட நிகழ்வு குறித்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த திடீர் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிரடி சுற்றிவளைப்பு
இந்த நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளுக்குள் இருந்தவேளையிலேயே இந்த 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 490 மில்லிகிராம் ஹஷீஷ், 140 மில்லிகிராம் ஐஸ், 320 மில்லிகிராம் கொக்கைன், ஹஷீஷ் சுருட்டுகள் மற்றும் தீர்வையற்ற சிகரெட்டுகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.