சுகாதார அமைச்சர் வைத்தியசாலை கழிப்பறையை சுத்தம் செய்தாரா! வெளியான உண்மை
கண்டி தேசிய வைத்தியசாலையின் கழிப்பறையை சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கழிப்பறையை சுத்தம் செய்தார் என சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை தன்மை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி நிறுவியதன் பின்னர் அந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக சுகாதார அமைச்சர் கண்டி தேசிய வைத்தியசாலையின் கழிப்பறையை சுத்தம் செய்தார் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
பணிப்பாளரின் கருத்து
கண்டி வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் 43ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கு சென்ற போது, கழிப்பறை மோசமாக காணப்பட்டதனை அவதானித்து அதனை சுத்தம் செய்தார் என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த தினத்தில் சுகாதார அமைச்சர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வருகை தரவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் போலியானது
இந்த செய்தி முற்று முழுவதிலும் பொய்யான செய்தி எனவும், 43ஆம் இலக்க நோயாளர் விடுதி கண்டி தேசிய வைத்தியசாலையில் கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சும் தகவல் வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் விஜயம் தொடர்பில் வெளியான தகவல் போலியானது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |