மலையகத்தில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று(03.04.2026) மலையக மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராமன் சிந்தூரன் தலைமையில், கொட்டகலை- கமர்ஷல் பகுதியில் நடைபெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக மலையக மக்கள் முன்வைத்து வரும் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரிவான கருத்துக்கள் இக்கூட்டத்தில் பரிமாறிக் கொண்டனர்.
பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் விசேட தீர்மானம்
இதன்போது கருத்து தெரிவித்த ராமன் சிந்தூரன்,
பேராதனை போன்ற முன்னணி பல்கலைக்கழகத்தின் கிளையாகவோ அல்லது தனித்துவமான பல்கலைக்கழகமாகவோ இதை அமைப்பது தொடர்பில் அரசின் கவனத்தை ஈர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் இருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்ற போதிலும், அவர்கள் தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை காரணமாக அதிக செலவுகள் மற்றும் தங்கும் வசதி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் பெரும் தடையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தை முறையாக முன்னெடுக்க சிறப்பு குழுவொன்றை அமைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கட்சி பேதமின்றி முன்வர வேண்டும்..
இந்த குழு மூலம் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான தகுந்த இடத்தைத் தேர்வு செய்தல், தேவையான சட்ட அமைப்பை உருவாக்குதல் மற்றும் ஆய்வுகளுடன் கூடிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேவையை நிறைவேற்ற, கட்சித் வேறுபாடுகள் இன்றி மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமன் சிந்தூரன் மேலும் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில், மலையகத்தின் கல்வி மான்கள்,பேராசிரியர்கள்,சமூக செயப்பாட்டாளர் எஸ்.கே.சந்திரசேகரன் உட்பட ஆசிரியர்கள் அதிபர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.