மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தே அபிவிருத்தித் திட்டங்கள் தீர்மானிக்கப்படுகின்றன - அருண் ஹேமச்சந்திரா
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்கும் புதிய நடைமுறை உருவாகியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
22 மில்லியன் செலவில் திருகோணமலையில் முதலாவது விதை நெல் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (17) மொரவெவ பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் விதை நெல் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மொரவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்குளம் கமநல சேவை நிலையத்தில் 22 மில்லியன் ரூபா செலவில் விதை நெல் உற்பத்தி நிலையம் மற்றும் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் விவசாயத் துறையை மேம்படுத்தும் நோக்கில், பிரஜா சக்தி ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் மாவட்டத்தில் நிலவும் விதை நெல்லுக்கான கேள்வியில் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல்வாதிகளால் மாத்திரம் தீர்மானிக்கப்பட்ட நிலை காணப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தற்போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊழல் மற்றும் வீண் விரயங்களைத் தவிர்த்து, மக்களின் நலன்களை முன்னிறுத்தி அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் ஊடாக, திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல்லின் கணிசமான பகுதியை உற்பத்தி செய்து விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
கமநல அபிவிருத்தித் திணைக்களமும் மாகாண விவசாயத் திணைக்களமும் இணைந்து இந்நிலையத்தின் ஊடாக விதை நெல் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் என்.விஷ்ணுதாசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மொரவெவ பிரதேச சபையின் தலைவர், திருகோணமலை மாவட்டப் பிரதி விவசாய ஆணையாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



