கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 2027 முதல் புதிய பாடத்திட்டங்கள்
நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது என்றும், அதன் கட்டமாக 2027ஆம் ஆண்டு முதல் 2, 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பதுளை நகரில் நேற்று(18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
புதிய பாடத்திட்டங்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
"நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் நாட்டின் கல்விக் கொள்கை கட்டாயம் மறுசீரமைக்கப்பட வேண்டும். முதலாம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்குப் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
வெறுமனே பரீட்சைகளுக்கு மட்டும் முகங்கொடுக்கும் மாணவர்களுக்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய தலைமுறையை உருவாக்குவதே எமது முதன்மை எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டார்.
விசேட வேலைத்திட்டம்
கல்வித் துறையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவது குறித்துத் தொடர்ந்து விளக்கிய பிரதமர், "17 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக அமைப்புக்கு 2 ஆயிரம் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு, தற்போது அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதமளவில் முழுமையான கல்வி முறைமைக்கு புதிதாகச் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.