மட்டக்களப்பில் பேருந்திலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு சந்தியில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று(18) காலை வெல்லாவெளியிலிருந்து பெரியபோரதீவு நோக்கிப் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர்,பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பெண் மரவேரில் தடுமாறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது பஸ் மோதியதால் உயிரிழந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தும் விசாரணைகளுக்காகப் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், மரணத்திற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

