மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை
அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.