இழுத்தடிப்பு செய்யப்படும் சம்பள அதிகரிப்பு: வீதிக்கிறங்கிய கிழக்கு பல்கலை ஊழியர்கள்
பல்கலைக்கழக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பானது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படாது தொடர்ச்சியாக அரசிடம் கோரப்பட்டிருந்த 15% சம்பள உயர்வானது இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இன்று வந்தாறுமூலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தேசிய தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு ஒன்றிணைந்து இந்த வாரம் தொடக்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கை
இந்நிலையில் தீர்மானத்திற்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஒன்றறை நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைவாக, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்திற்கு அமைவாக நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணியுடன் தமது கடமைகளில் இருந்து விலகி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நாள் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
அரசின் செயற்பாடுகளை வண்மையாக கண்டிக்கும் வகையிலான தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள், செய்முறை பயிற்சிகள், கள விஜயங்கள் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முக்கிய கூட்டங்கள் பிற்போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
107% சம்பள அதிகரிப்பு
இந்நிலையில், 2016ம் ஆண்டின் வரவு செலவு முன்மொழிவுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 107% சம்பள அதிகரிப்பில், தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம் 92% மட்டுமே அதிகரிப்புச் செய்யப்பட்டது.
இதனூடாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிரான தொழிற்சங்க போராட்டமாகவே இது அமைந்துள்ளது. பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15% சம்பள அதிகரிப்பை வழங்க கோரல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்புச் செய்யுமாறு அரசை வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |