தேசிய பாதுகாப்பை வைத்து நாடகமாடுவதை நிறுத்துங்கள்! ஜனநாயகத் தேசியக் கூட்டணி வலியுறுத்தல்
அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, இது குறித்துப் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று (20.10.2026) ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதயாத்திரைகள் மற்றும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டித் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலர் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்துப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டு, இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெற்று முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றார்.
ஞானசார தேரரின் விடுவிப்பு விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், ஞானசார தேரரின் விடுவிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, பிழைப்புவாத அரசியல் செய்யும் சில துறவிகள் விகாரைகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்கள் உண்மையாகவே நிம்மதியாக வாழ விரும்பினால் விகாரைகளில் இருந்துகொண்டு அரசியல் செய்வதையும், பொய்ப் பிரசாரக் கட்சிகளிடம் அடைக்கலம் தேடுவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய துறவிகளின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் அழுத்தம்
நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து நிருக்ச குமார மேலும் கூறுகையில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாரும் செயற்பட முடியாது எனத் தற்போதைய ஜனாதிபதி மிகத் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், ஆட்சியில் உள்ள சிலரும் அமைச்சரவையில் உள்ளவர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை மாற்றுவதற்காக ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தங்களுக்குச் சாதகமான தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சட்டங்களை மாற்ற முற்படும் இத்தகைய தவறான முன்னுதாரணங்களுக்கு எதிராக நாட்டின் இளைய தலைமுறையினரும் ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் படுகொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது பதுங்குமிடங்களைத் தேடிச் செல்வதையோ, அரசியல் தஞ்சம் கோருவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இத்தகைய நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி தொடர வேண்டும். மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்குவதே அரசின் முதன்மைக் கடமையாகும் என்றார்.