யாழ்.போதனா வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு: மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை
யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospitap) சிகிச்சை பெற்றதாகக் கூறி தாதியர் மீது சமூக ஊடக செயலி மூலமாக அவதூறு செய்த சுகாதார ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathyamoorthy) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கைகள்
மேலும் தெரிவிக்கையில்,“சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தான் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்ததாகவும் அப்போது வேறு ஒரு நோயாளரிடம் தாதியர் நடந்து கொண்ட விதம் பற்றி, தாதியர்களுக்கும் போதனா வைத்தியசாலைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் சமூக ஊடக செயலி மூலம் வீடியோ பதிவினை மேற்கொண்டிருந்தார்.
இது விடயமாக சம்பந்தப்பட்ட பிரிவு உத்தியோகத்தரின் வைத்தியசாலை நிர்வாகத்ததுடன் கலந்துரையாடி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. மேற்படி நபர் தாதியர் சேவையைப்பற்றி மிக இழிவாகக் கதைத்ததினால் அது தாதியர் சேவைக்கும் வைத்தியசாலைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தினசரி வரும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மீது பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
2. குறித்த உத்தியோகத்தர் சம்மந்தமாக சுகாதார அமைச்சு மற்றும் அவர் பணியாற்றும் வைத்தியசாலை நிர்வாகம், பிராந்திய சுகாதார நிர்வாகங்களுக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
3. சுகாதார அமைச்சின் விசாரணையின் போது குறிப்பிட்ட உத்தியோகத்தர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் பற்றி தெளிவாக அது நடந்த நேரம், விடுதி, சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர் பற்றி அறியத்தருவாராயின் அது விடயமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையீனம்
யாழ். போதனா வைத்தியசாலையானது பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்ற இடம். ஆகவே இவ்வாறான அவநம்பிக்கை ஏற்படுத்துகின்ற செய்திகள் சிகிச்சைக்காக வருபவர்களை, பொதுமக்களை பதற்றத்திற்குள்ளாக்க கூடியது.
அத்துடன் வைத்தியசாலை சேவைகள் தொடர்பாக நம்பிக்கையீனத்தையும் வெறுப்புத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி அனுமதிக்க முடியாது.
வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் கவனத்தின் கொள்ளவேண்டிய ஏனைய விடயங்கள் பற்றி பணிப்பாளர் பணிமனைக்கு எழுத்து மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ உரியவர் முறைப்பாடு செய்கின்ற போது, தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த விடயத்தில் மீண்டும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |