இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் (Photos)
இலங்கையில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் அருகில் பதற்றம் - போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் (Video) |
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இதன் காரணமாக இலங்கை அரசியல் பரப்பும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
இதற்கு முன்னர் பதவி வகித்த முழு அமைச்சரவையும் மக்களின் போராட்டங்களை அடுத்து ஒரே இரவில் பதவி விலகி, புதிய அமைச்சரவை பதவியேற்ற போதிலும், அரசியல் நெருக்கடிகள் இதுவரை தீரவில்லை என்பதுடன் மக்களின் போராட்டங்களும் முடிவுக்கு வரவில்லை.
மகிந்தவின் பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் |
இவ்வாறான பின்னணியின் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உடன் பதவி விலகுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தும் அளவுக்கு இலங்கை அரசியல் நிலைமை கைமீறிச் சென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மீண்டும் அமைச்சரவை கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்ததுடன், மகிந்த ராஜபக்சவிடம் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் - ராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்கள் |
எனினும் தாம் பதவி விலகப்போவதில்லை எனவும், ஜனாதிபதி அவ்வாறு தன்னிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை எனவும் பிரதமர் அதன் பின்னர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நெருக்கடி நிலைகளையும் தாண்டி, நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி நடத்தப்படும் போராட்டமும் தீவிர நிலையை அடைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் நடத்தியுள்ளதுடன், சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளின் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு இலங்கையில் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் என்பன தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியினால் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.