நாடாளுமன்றம் அருகில் பதற்றம் - போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் (Video)
நாடாளுமன்றம் அருகில் மீண்டும் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம ஆகிய மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள நேற்றைய தினம் ஹோருகோகம என்ற மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்ற மக்கள் டென்சில் கொப்பேகடுவ மாவத்தைக்கு சென்றனர். கலகத் தடுப்பு உடை அணிந்திருந்த பொலிஸார் ஒரு எதிர்ப்பாளர் ஒருவரை கடுமையாக தாக்கியதுடன், அவரை இழுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணீர் புகை தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.