மொட்டுவை விட்டு வெளியேறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!..அரசியல் குழு தீர்மானம்
கட்சியின் ஒழுக்கத்தை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்றுக் குழுவுக்கு வழங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானமானது, பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கூடிய அரசியல் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் அரசியல் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள்
இதனிடையே, பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகக் காணப்படும் தொகுதி அமைப்பாளர்களின் பதவிகளுக்கு விரைவில் பொருத்தமானவர்களை நியமிக்கவும் அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) முன்வைத்த யோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதற்கும் அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |