உயரும் ரூபாவின் பெறுமதி! ஜனாதிபதி ரணிலால் ஏற்பட்டுள்ள நன்மைகள்
இன்று, புறக்கோட்டை, மஹரகம, பதுளை அல்லது இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகைக் காலத்தில் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும் என்று சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு சம்பளத்தை அதிகரிக்கவில்லை. இன்று ரூபாயின் பெறுமதியும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி
கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டை விடவும் இன்று பத்து மடங்கு நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார். அக்காலத்தில் மூன்று வேளை உணவு கேள்விக்குறியாக காணப்பட்டது. மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்பட்டனர்.
அப்போதைய ஆட்சியாளர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்றுகொண்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு பல முறை கோரியிருந்த போதும், அந்த சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் தனியொரு ஆசனத்தை மட்டும் பெற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அந்த சவாலை ஏற்றுக்கொண்டு மக்களை வாழ்க்கைக்குத் தகுந்த பொருளாதார நிலையை உருவாக்கினார்.
அதன்படி கடந்த 23 மாதங்களில் நாட்டை முன்னைய பொருளாதார நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இன்று, புறக்கோட்டை, மஹரகம, பதுளை அல்லது இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகைக் காலத்தில் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றிருக்காவிடின் இன்று நாட்டின நிலை என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் எதிர்க் கட்சிகளிடம், ஏன் அன்று சவாலை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும். அந்தக் குழுக்களுக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு சம்பளத்தை அதிகரிக்கவில்லை. இன்று ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே இவை அனைத்தும் நடக்கின்றன. மீண்டும் தவறு செய்தால் நம்மை விட நம் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |