அரசியல் சதுரங்க வேட்டைக்குள் இறங்கிய சந்திரிக்கா! அடுத்தது என்ன..??
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெண் ஆளுமை தான் சந்திரிக்கா பண்டாரநாயக்க(Chandrika Kumaratunga) குமாரதுங்க.
ஒரு தசாப்த காலமாக இலங்கையை ஆட்சி செய்த, எதற்கும் சலைக்காத ஒரு இரும்புப் பெண்மணி என்று சொன்னால் தவறில்லை.
கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதுடன், செயற்பாட்டு அரசியலில் அவ்வளவு தீவிரமாக இயங்காவிட்டாலும், அரசியல் பரப்புக்குள் அவருடைய இருப்பு உறுதிச் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது.
சந்திரிக்காவின் அடுத்தக்கட்ட ஆட்டம்
2019ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் பின்னர் அரசியலில் அவ்வளவு ஈடுபாடு காட்டாது ஒதுங்கியே இருந்து வந்துள்ளார்.
ஆனால்... இந்ந வருடம் பிரதான இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் களமிறங்கியுள்ளார் சந்திரிக்கா.
அவரின் மீள் பிரவேசத்தின் முதல் ஆட்டமே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை(Maithripala Sirisena) அதிரடியாக பதவி நீக்கியதில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக அரசியில் களத்தில் அதிரடியான நகர்வுகளை மேற்கொள்வதில் சந்திரிக்கா மிகப்பெரும் பலசாலி. தனக்கு நிகர் தானே என்பது போலத்தான் அவருடைய ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும்.
ரணிலுக்கு வைத்த செக்
கடந்த 2004ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக சுதந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவும், பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) அதிகாரத்தில் இருந்தனர். அந்தப் காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்திருந்தது.
ரணிலால் கொண்டு வரப்படும் திட்டங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதியான சந்திரிக்காவில் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் 2004ஆம் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டிருந்தார்.
இதனை இனவாத அரசியல்வாதிகள் பெரும் பிரச்சாரமாக முன்னெடுத்து முறுகல் நிலையை மேலும் தீவிரப்படுத்தியிருந்தனர்.
அந்தக் காலப்பகுதியில் ரணிலை தோற்கடிக்கும் நோக்கில் சுதந்திர கட்சியின் பாரம்பரியத்தை கைவிட்டு, ஆட்சியைக் கலைத்து மூன்றாம் நபரான மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) பிரதமராக களமிறக்கினார் சந்திரிக்கா
ராஜபக்சக்களின் அதீத வளர்ச்சி
அதன் பின்னர் அடுத்த வருடம் தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி மகிந்த ராஜபக்சவை நாட்டின் தலைவராக தேர்தலின் மூலம் கொண்டு வந்ததில் சந்திரிக்காவின் பணியே முதன்மையானது. இதன் ஊடாக ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியம் இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ராஜபக்சக்களின் அதீத வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ராஜபக்சக்களின் நகர்வுகளில் அதிருப்தி கண்ட சந்திரிக்கா அரசியல் ரீதியாக சற்று ஓய்வெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.. ஆனால் புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்ற ஒரு வாக்கு உண்டே..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2005இல் நாட்டின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதுடன், நாட்டில் 30 வருடக் காலமாக நிலவிய உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதீத ஆர்வம் காட்டியதுடன், அதனோடான முக்கியப் பொறுப்புக்களில் தனது குடும்பத்தவர்களை முன்னிறுத்தினார்.
இறுதியில், 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அதனைக் காரணமாகக் கொண்டு மீண்டும் ஒரு முறை ராஜபக்சக்கள் ஆட்சி பீடம் ஏறினர். அது மாத்திரம் அல்லாது, யுத்த வெற்றியைக் காரணமாகக் கொண்டு நாட்டின் சட்டங்களிலும், அரசியல் யாப்பிலும் தங்களுக்கு ஏற்றது போல திருத்தங்களைக் கொண்டு வந்து, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதார வீழ்ச்சிக்கும் ராஜபக்சக்கள் வித்திட்டனர்.
இந்த காலப்பகுதியில், மிக அதிகளவான பணத்தினை ராஜபக்சக்கள் கொள்ளையிட்டதாகவும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றச்சசாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
மைத்திரியை உருவாக்கிய சந்திரிக்கா
எனினும், அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொண்டது போல மகிந்த ராஜபக்ச மீண்டுமொரு முறை 2015இல் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்தார். ஆனால் அவர் அறியாத ஒன்று தனக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஒரு படையை உருவாக்கியிருப்பது.
2010இற்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலக்கட்டத்தில் அவர் மீது ஏற்பட்ட கடுமையான அதிருப்தி நிலையோடு, மகிந்தவின் அமைச்சரவைக்குள்ளேயே இருந்த மைத்திரியின் பால் சந்திரிக்காவின் கவனம் திரும்பியது.
மகிந்த அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் போது, அவரின் விசுவாசியான மைத்திரியைக் கொண்டு அடுத்த அதிரடி நகர்வை சந்திரிக்கா ஆரம்பித்தார். இந்தக் கூட்டணியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இணைந்தனர்.
யாரும் எதிர்பாரா வண்ணம் தான் 2015இல் மைத்திரியின் ஜனாதிபதி அவதாரம் இருந்தது என்றாலும், அதன் பின்னணியில் சந்திரிக்கா என்னும் மிகப் பெரிய ஆணி வேர் இருந்தது.
எனினும், ஆட்சிப்பீடம் ஏறிய காலப்பகுதியில் மைத்திரியின் நகர்வுகள் அனைவருக்கும் சாதகமாக அமைந்தாலும், பழைய தலைவர் மீதான விசுவாசம் மீண்டும் அழைத்தது போல திடீரென்று மகிந்தவை பிரதமராக்கியமை யாரும் எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்ததுடன் சந்திரிக்காவுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
ராஜபக்சக்களின் அடுத்த வீழ்ச்சி
2015இல் கடும் தோல்வியை சந்தித்த ராஜபக்ச தரப்பு அடுத்த வெற்றிக்கு தங்களை பட்டைத் தீட்டிக் கொண்டனர். புதிய கட்சி ஒன்றை ஸ்தாபித்து அடுத்த வந்த மூன்று தேர்தல்களை மிக இலகுவாக வெற்றிகொண்டனர். எனினும் விதி யாரை விட்டது, ஆரம்பத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்கள் இட்ட வித்து, அடுத்த ஆட்சிக் காலத்தில் விஸ்வரூப வளர்ச்சிக் கொண்டு அவர்களையே ஆட்சிப் பீடத்தில் இருந்து தூக்கி எறிந்தது.
இதனை, சமாளித்து நாட்டைக் கட்டியெழுப்ப ரணில் அவர்களுக்கு கை கொடுத்தாலும் கூட தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த தலைவர் தொடர்பான எதிர்பார்ப்பு இலங்கை மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.
மைத்திரியின் பதவிக்கு ஆபத்து
இவ்வாறான நிலையில்தான், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததும், அதன் பலனாக தலைமைப் பதவியில் நீடிக்க மைத்திரிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததும் நிகழ்ந்திருக்கின்றது.
அதனோடில்லாமல், அடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவைக் கூட்டிய சந்திரிக்கா பதில் தலைவரை நியமித்துள்ளதுடன், அரசியல் களத்தில் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
“2015ஆம் ஆண்டு நான் நம்பிக்கை வைத்து, கட்சியையும் நாட்டையும் ஒப்படைத்த நபர் நாட்டையும் கட்சியையும் விழுங்கிவிட்டார். அன்று நான் இழைத்த தவறை இன்று சரி செய்து விட்டேன்” என்று இலங்கை அரசயில் பரப்புக்குள் சந்திரிக்கான தனது பரபரப்பான ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
சந்திரிக்கா என்னும் ஆளுமை
ராஜபக்சக்களின் அரசியல் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்ததுடன், அவர்களின் தீவிர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர், மைத்திரிக்கு ஜனாதிபதி என்ற ஒரு புதிய பரிணாமம், மைத்திரியின் வளர்ச்சி என பல முன்னோடித் தலைவர்களின் வளர்ச்சியின் பின்னணியில் சந்திரிக்கா இருக்கின்றார் என்பதில் வேறு கருத்துக்கள் இல்லை.
அத்தோடு, மைத்திரி, ராஜபக்சக்கள் உள்ளிட்ட பலரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சக்தியாகவும் சந்திரிக்கா இருந்திருக்கின்றார்.
இவை அனைத்தையும் தாண்டி, அரசியல் ராஜதந்திரத்தில் நரி என கூறப்படும், இலங்கை அரசியலின் மறுக்க முடியாத ஒரு சக்தியாக, தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் ஆட்டம் காண வைத்தவர் சந்திரிக்கா.
இவ்வாறான நிலையில், தற்போதைய சந்திரிக்காவின் மீள் பிரவேசமானது அடுத்து இலங்கை அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
தலைமைத்துவ வெற்றிடம்
உண்மையாகச் சொல்லப் போனால், பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்து ராஜபக்சக்களும் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது சொந்தக் கட்சியிலும் படும் பின்னடைவான சூழ்நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் வேட்பாளர் முதற்கொண்டு, மக்களது ஆதரவு இவர்களுக்கு கிடைக்குமா என்பது வரை அனைத்துமே சந்தேகத்துக்கு இடமாகவே உள்ளது.
அத்தோடு, கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தனது தந்திர அரசியலால் இன்று நாட்டின் ஆட்சிப் பீடத்தை அடைந்திருக்கும் ரணில் தரப்பு தொடர்பிலும் சந்தேகமான நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்த அதேவேளை, மீண்டும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமா அல்லது கூட்டணிகள் சாத்தியப்படுமா என்பதும் கேள்விக்குறியே.
அடுத்தது, தற்போதைய எதிர்க்கட்சியில் இருக்கும் சஜித் தரப்பில் ஒரு ஆளுமையான தலைமைத்துவம் இல்லை என்பதும், கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளும் கூட அடுத்த ஆளுமைமிக்க முதன்மையான தலைமைத்துவத்திற்கான வெற்றிடத்தை மீண்டும் நினைவுபடுத்துகின்றது.
இந்த நிலையில், மீள் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ள சந்திரிக்காவும், அவரது தரப்பும் அந்த வெற்றிடத்தை நிரப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமையும், ஸ்திரமற்ற அரசியலும் சர்வதேச நாடுகளின் கவனத்தையும் நகர்வையும் இலங்கையின்பால் திசை திருப்பியுள்ள நிலையில், நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
இந்த எதிர்பார்ப்புக்களுக்கு தீணி போடும் மிக முக்கிய சக்தியாக சந்திரிக்கா இம்முறை இருக்கப் போகின்றார் என்பதில் ஐயமில்லை... பொறுத்திருந்த பார்க்கலாம் சந்திரிக்காவின் சதுரங்க ஆட்டத்தை..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 10 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.