இலங்கையில் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்
இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த சில வருடங்களில் 73000 ரூபாவால் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதவீதத்தின் அடிப்படையில், இது உண்மையான தனிநபர் வருமானத்தில் 12% வீழ்ச்சியாகும்.
2019ஆம் ஆண்டில், உறுதியான தனிநபர் வருமானம் ஆறு இலட்சத்து ஐந்தாயிரத்து எழுநூற்று ஒன்பது ரூபாவாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் அது ஐந்து லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து நானூற்று பதின்மூன்று ரூபாவாக குறைந்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம்
இதேவேளை 2023ஆம் ஆண்டுக்குள் ஐந்து இலட்சத்து முப்பத்தி இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பத்தாறாக குறைந்துள்ள போக்கை காட்டுவதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலத்தில் நாட்டில் உள்ளூர் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13206 பில்லியன் ரூபாவாகவும், 2021 ஆம் ஆண்டில் 13125 பில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2023ஆம் ஆண்டின் இறுதியில் இது ரூ.11,881 பில்லியனாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, நாட்டில் ஒருவரின் மாதாந்த உறுதியான வருமானமும் கிட்டத்தட்ட 6150 ரூபா குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |