மகனுக்கு பதில் விசாரணையில் முன்னிலையான அரசியல்வாதி
அவுஸ்திரேலியாவிலிருந்து கறவை மாடுகளை இறக்குமதி செய்த சம்பவத்தில் 110 மில்லியன் டொலர் நிதி முறைகேடு தொடர்பாக, வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த தனது மகனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2012 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த இறக்குமதி தொடர்பாக FCID விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
விசாரணை மறுப்பு
கடந்த 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நடந்த கறவை மாடுகளை இறக்குமதி செய்த சம்பவத்தில் நிதி முறைகேடு தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில், விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன் கடந்த திங்கட்கிழமை(15.06.2026) FCID முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், முன்னாள் அமைச்சர் விஜயமுனி சொய்சா, தனது மகனுக்குப் பதிலாக தன்னிடம் வாக்குமூலம் பெறுமாறு கேட்டு அங்கு வந்திருந்தார்.
ஆனால், விசாரணை அதிகாரிகள் சட்ட விதிகளின்படி அவ்வாறு செய்ய மறுத்து, அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
விஜித் வியமுனி சொய்சாவின் புதல்வர் பின்னர் ஒரு தேதியில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்தில் (2015-2018) நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய விஜித் விஜயமுனி சொய்சாவிடமும் கடந்த பெப்ரவரி 17 ம் திகதியன்று FCID விசாரணை நடத்தியிருந்தது.

மேலும், அந்த காலத்தில் கிராமியப் பொருளாதார அமைச்சராக இருந்த பி. ஹரிசன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் முன்னாள் செயலாளரான ரேணுகா ஏகநாயக்க ஆகியோரிடமும் முன்னதாக விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகளின் போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த ரேணுகா ஏகநாயக்க, பின்னர் அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தார்.