வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட அநுர அரசு : ஊழல் ஒழிப்புப் படை அமைப்பாளர் குற்றச்சாட்டு
தற்போதைய அரசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொதுமக்களின் நிதியையும் அரச சொத்துகளையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்தே ஆட்சிக்கு வந்த போதிலும், இன்று அந்த வாக்குறுதிகள் முற்றுமுழுதாக மீறப்பட்டுள்ளதாக ஊழல் ஒழிப்புப் படையின் (Anti-Corruption Force) அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க (Niroshan Padukka) குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நேற்று(06.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசில் தொடரும் மோசடிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரம் குறைந்த 19 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு 18 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பான தகவல்கள் கணக்காய்வாளர் நாயகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 2.5 மில்லியன் டொலர் தொகை மற்றும் தபால் திணைக்களத்திலிருந்து செலுத்தப்பட வேண்டிய 6 இலட்சம் டொலர் பணம் காணாமல் போனமை குறித்து நிதி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதியோ அல்லது அரசோ இதுவரை எந்தவொரு தெளிவுபடுத்தலையும் வழங்காது மௌனம் காக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் 35 ஆயிரம் சதுர அடி வசதிகளைக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லம் இருக்கும்போதே, சபாநாயகரும் அவரது செயலாளரும் சட்டவிரோதமான முறையில் அரச வீடுகளைப் பெற்றுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சபாநாயகர் அழுத்தம்
சபாநாயகரின் இந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்தி நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், 47 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தயார் செய்துள்ளன.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்குத் தகவல்களை வழங்க வேண்டாம் என அதிகாரிகளுக்குச் சபாநாயகர் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஊழல் குறித்துப் பார்க்கையில், அரசு புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரும்போது இலஞ்ச ஊழல் மேலாண்மைத் தர நிபந்தனையைத் திட்டமிட்டு நீக்கியுள்ளது.
இதன் மூலம் கடந்த காலத்தில் ஊழல்களில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி, நாட்டின் பிரதான வருமான வழியொன்றை அரசு இல்லாமல் செய்யப் பார்க்கின்றது.
அரசு அபிவிருத்தியை விடுத்து அடக்குமுறையையே தனது ஆட்சிக் கொள்கையாகத் தெரிவுசெய்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலங்களின் மூலம் நீதிமன்றப் பிடியாணை இன்றி எவரையும் கைது செய்யவும் தடுப்புக் காவலில் வைக்கவும் அதிகாரம் வழங்க முற்படுவது அடிப்படை உரிமைகளுக்கும் அரசமைப்புக்கும் முரணானது என்றார்.