பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சமூக ஊடகங்கள் ஊடாகப் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 47 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேகநபரைக் கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அறிவித்தல்களை மேலும் பிரசுரிக்கவோ ஒளிபரப்பவோ வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரது இருப்பிடம் தெரியவில்லை என்றும் முன்னர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.