பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு!
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக உயிரிழக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறையான விசாரணையை நடத்துமாறு கோரி சிவில் அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திரன் நிஷ்சங்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் எவையும் சரியான முறையில் அமுல்படுத்தப்படாமையே இந்நிலைக்கு முதன்மை காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பங்களில் சுமார் 50 சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மனிதநேயமற்ற சித்திரவதைகளும் சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை கொடூரமாக மீறுவதுமே இந்த மரணங்களின் பின்னணியில் உள்ள உண்மை நிலவரம் என குற்றம் சுமத்தினார்.
அண்மையில் ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சர்ச்சைக்குரிய சம்பவமே இதற்கு அண்மைக்கால உதாரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் சிறைக்கூடப் பொறுப்பதிகாரி ஆகியோரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த 'பி' தர பொலிஸ் நிலையமான வனத்தவில்லுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவரை, பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட நெருக்கம் காரணமாக ஹோமாகம போன்ற பிரதான தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக நியமித்திருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த அதிகாரி அப்பதவிக்கு தகுதியற்றவர் என ஹோமாகம கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகரால் எட்டு மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸ் மா அதிபர் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் தொழில்முறை மட்டத்தைத் தாண்டி அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களத்தின் உள் அதிகாரிகளிடையேயும் கடும் விரக்தி நிலவுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும், அப்பரிந்துரைகளைப் புறக்கணித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.