பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி - இருவருக்கு விளக்கமறியல்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் நேற்றுமுன்தினம்(03) இரவு சுமார் 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை இடைமறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர்கள் பொலிஸார் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் இரு இளைஞர்களையும் காயமடைந்த நிலையில் கைது செய்ததுடன், அவர்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரு போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் நேற்று(4) செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரை மோதி விபத்தினை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சுமார் 17 வயதுடையவர்கள் எனவும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி குறித்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறு மூலையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.