வேலுகுமாருக்கு எதிராக தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டு: நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) முகநூல் பக்கத்தில் தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் (Velu Kumar) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்காக வேலுகுமார் எம்.பி மதுபானசாலைக்கான அனுமதியை பெற்றுள்ளார் என தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
வெளியான காணொளி
இது தொடர்பான காணொளி அவரது முகநூல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூகவலைத்தள பக்கங்களிலும் பதிவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த வேலுகுமார் சார்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, வேலுகுமார் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிவேந்திரன், கனிஷ்ட சட்டத்தரணி சிவானந்தராஜா உள்ளிட்ட சட்டக்குழுவினர் முன்னிலையாகி இருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போதே நீதிமன்றத்தால் மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்று வேலுகுமார் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வேலுகுமாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன என்று அவரின் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |