சிறையிலிருந்தே கட்சியை வழிநடத்தும் நாமல் ராஜபக்ச! மொட்டுத்தரப்பினரின் முழக்கம்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், சிறையிலிருந்தவாறே அவசியமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றமையால் கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(23) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மொட்டு ஒருபோதும் முடங்காது
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, ஏற்பாட்டுச் சக்தியை இழந்துவிட்டது எனச் சில கட்சிகளும் நபர்களும் நினைக்கலாம்.

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களைக் கட்சியின் செயலாளர் உட்பட அனைவருக்கும் வழங்குகின்றார்.
தொகுதி மட்டத்தில் அடுத்த வாரம் முதல் நடைபெறும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ச பங்கேற்காவிட்டாலும், எமது கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். எனவே, நாமலைச் சிறையில் அடைத்தால் கட்சி வீழ்ந்துவிடும் என எவரும் நினைக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.