ஞானசார தேரருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
ஞானசார தேரருக்குச் சிறை அதிகாரிகளால் காவியுடை அகற்றப்பட்ட விவகாரத்தில், அவருக்கு மீண்டும் காவி உடையை அணிவிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இன்று (23) தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மார்க்கம் மற்றும் திருக்குர்ஆன் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இதனைச் சுட்டிக்காட்டினார்.
சிறைத்தண்டனை
ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக வீரசூரிய, சிறைச்சாலை விதிமுறைகளை மீறாமல், பௌத்த பாரம்பரிய பாரம்பரிய வழக்கப்படி தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க அனுமதிக்கக் கோரி கோட்டே மகாநாயக்க தேரர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்ததாகவும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு, பிரதிவாதியை மின்னணு முறையில் (WhatsApp video call) முன்னிலைப்படுத்துவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, தேரர் காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, கோட்டே மகாநாயக்க தேரரின் கோரிக்கை விடயம், மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஏனைய பௌத்த பிக்குகளுக்கும் இதேபோன்று மகாநாயக்க தேரர்கள் மூலம் காவி உடை அணிவிக்க அனுமதி கேட்கப்பட்டால் என்ன செய்வது?" எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை எதனையும் பிறப்பிக்க முடியாது எனத் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத் (திருத்த) சட்டத்தின்கீழ், குற்றத்தை ஒப்புக்கொண்டு இணக்கப்பாட்டுக்கு (Plea agreement) வருவது தொடர்பில் அடுத்த தவணையில் சமர்ப்பணங்களை மேற்கொள்ளுமாறு இரண்டு தரப்பிற்கும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன், வழக்கு மீண்டும் ஜனவரி 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.