டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்
அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும் கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.
கண்டனம்
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.