வளைகுடாவில் அமெரிக்க சொத்துகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை
தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்கள் உட்பட வளைகுடா பகுதி முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல்
அத்துடன், கடந்த வார இறுதியில் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஆறு வார கால உச்சத்தை நெருங்கியுள்ளன.
இந்நிலவரம் குறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், "எங்கள் சொத்துகளை நீங்கள் தாக்கினால், நீங்களும் திரும்பத் தாக்கப்படுவீர்கள்" என நேரடியாக எச்சரித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் புதிய தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை
இதனால் தரவுகளின்படி, மே மாதத்திற்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவரவோ, வளைகுடாப் பகுதியில் இயல்பான எரிசக்திப் போக்குவரத்தை மீட்டெடுக்கவோ முறையான இராஜதந்திர முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டிருப்பது, அப்பகுதியில் பதற்றத்தையும் பேராபத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.