மாவீரர் நினைவேந்தல்: நாடாளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதம்
வடக்கு - கிழக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள், தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், இரா.சாணக்கியன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள், பயங்கரவாத்தின் தோற்றப்பாட்டையே எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறக் கூடாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் இன்றைய ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சாணக்கியனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை கஜேந்திரகுமார் வழிமொழிந்து பேசும்போதே இந்த பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
மேலும் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் கருத்து தெரிவிக்கையில்,
“பயங்கரவாத தடைச் சட்டம், இந்த நாட்டில் உள்ள பலருக்கு விருப்பம் அற்ற ஒன்றென கூறப்படுகிறது. அதனை அங்கீகரிக்கவில்லை எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
பயங்கரவாத தடைச் சட்டம்
அந்த கருத்துடன் தாம் உடன்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சர்வஜென வாக்கெடுப்பொன்றை நடத்தினால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் சரியானது என நான் இங்கு கூறவரவில்லை. எனினும் நீங்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறித்தே நான் இங்கு கூறுகின்றேன்.
மாவீரர் தின சம்பவங்கள் குறித்து நான் கூறுவதற்கு விரும்புகின்றேன். இவர்கள் தொடர்ச்சியாக கூறுகின்றனர்.11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நீதிமன்றங்கள், இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம் என உத்தரவுகளை வழங்கியிருந்தன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நினைவேந்தல்களை செய்வதை தடுக்கும் வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சட்டமா அதிபரும் உறுதி வழங்கியிருந்தார்.
நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூறும் விடயம், தமது குடும்பத்தில் உயிரிழந்தவர்களை சென்று நினைவுகூர முடியும். நாமும் செல்கின்றோம்.
தந்தை, தம்பி ஆகியோரின் கல்லறைகளுக்கு செல்கின்றேன். அனைவருக்கும் அவ்வாறு செல்ல முடியும். எனினும் வேறு ஒருவரின் பிறந்த தினமன்று நான் கல்லறைக்கு செல்வதில்லை.
நான் எனது கட்சி கொடியை கல்லறைக்கு கொண்டுசெல்வதில்லை. இந்த கொடிகளை பல்வேறு கட்சிகளும் பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள்.
குறுக்கிட்ட கஜேந்திரகுமார்
எனினும் சாதாரண மக்கள் கல்லறைகளுக்கு கொடிகளை கொண்டுசெல்வதில்லை. தமது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர செல்லும் போது கொடிகளை கொண்டுசெல்வதில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் அந்த கொடியை கொண்டு, அதிகளவான மக்கள் செல்கின்றமை, தத்தமது குடும்பத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அல்லவே.
அது தெளிவாக தெரிகின்றது. மறுபுறம் இது கிழக்கில் இடம்பெறவில்லை. சில இடங்களில் உடைகள் அணிந்துசெல்வதை பாருங்கள்.” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
“இதுபோன்ற ஒரு சம்பவவே இடம்பெற்றது. மட்டக்களப்பில் 11 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்பாக தெளிவுபடுத்துங்கள்.”
எனினும் தமது உரை நிறைவடைந்த பின்னர் கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ், வலியுறுத்திய நிலையில், வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
டிரான் அலெஸ்
நீங்கள் அனைவரும் உரையாற்றும் போது நான் குறுக்கிடவில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற விடயத்தையும் வடக்கில் இடம்பெற்ற ஒரு விடயத்தையும் தொடர்புபடுத்த முயற்சிக்க வேண்டாம்.
டிரான் அலெஸ்
நிழற்படங்களை காண்பித்த பின்னர் நீங்கள் உற்சாகமடைந்துவிட்டீர்கள். இதுபோன்ற விடயங்களை நீங்களே ஊக்குவிக்கின்றீர்கள்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கைதுகள்
இரா.சாணக்கியன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் ஆடை அணிந்து சென்ற விடயம் தனியொரு சம்பவம். அதனை மட்டக்களப்பில் இடம்பெற்ற கைதுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம்.
டிரான் அலெஸ்
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக கதைக்கும் போது, மட்டக்களப்பில் இடம்பெற்ற விடயம் குறித்து மாத்திரம் தம்மால் விளக்கமளிக்க முடியாது.
தாம் விரும்பியவாறே பதில் அளிப்பேன். உங்களுக்கு விரும்பமானது போன்று பதில் அளிக்க முடியாது.
நாடாளுமன்றம் உட்பட அனைத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள். அன்றைய தினத்தில் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளே இந்தப் படங்கள் காட்டுகின்றன.
இதுபோன்ற விடயங்களை எடுத்துப் பார்க்கும் போது, பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை, தமிழீழ விடுதலை புலிகளின் கருத்துக்களுடன் தொடர்பில்லை என யாரலும் கூற முடியாது.
தாம் கூறும் கருத்துக்கள்
தொடர்பாக பிரச்சினை இருக்குமாயின், அது குறித்து தனது உரையின் பின்னர் கேள்வி
எழுப்புங்கள்
எமக்கும் ஒரு சில நிமிடங்களை தர வேண்டும். அல்லாவிடின் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மூலம் நாட்டிற்கு தவறான தகவல் பரப்படும்.
பிரதி சபாநாயகர்
அவ்வாறு தவறான கருத்து கொண்டுசெல்லப்படாது. இந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு அரை மணிநேரமே உள்ளது. இருதரப்பினருக்கும் 15 நிமிடங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்று செய்வதற்கு இடமளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதுடன், ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை தொடர்பான நிலையியல் கட்டளையின் கீழ் அமைச்சர் பதில் அளிப்பதாகவும் அதற்கு மாறாக செயற்பட முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க விடயம்
டிரான் அலெஸ்
நாம் உண்மையான விடயங்களை முன்வைக்கும் போது, சிலருக்கு அதனை கேட்டுக்கொண்டிருப்பது கடினமாக உள்ளது.
இதுபோன்ற விடயங்களை செய்வதற்கு இடமளிக்காமல் இருப்பது தொடர்பாக நீங்களும் தெரிந்திருக்க வேண்டும். (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை நோக்கிரிரால் அலெஸ் சுட்டிக்காட்டினார்)
தாம் முன்னர் கூறியதை போன்று நினைவேந்தல் என்பது ஒரு விடயம் எனவும் கொடிகளை கொண்டுசெல்வது, பிரபாகரனின் படத்துடன் கேக்கை கொண்டுசெல்வது, பிரபாகரனின் படத்துடன் ஆடைகளை அணிவது, போன்ற விடயங்களை நீங்களே தடுத்து நிறுத்த வேண்டும்.
நல்லிணக்கம் தொடர்பாக நீங்கள் கதைக்கின்றீர்கள். ஒரு பக்கமாக இந்த விடயம் செய்யப்பட்டால் அந்த விடயத்தில் தீர்வொன்றை பெற முடியாது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காவிடின், காவல்துறையினரும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது.
சாணக்கியனால் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்புப் பிரேரணை
இலங்கையில் அமுலிலுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக இலங்கை பல வருடங்களாகச் சர்வதேசத்திலே மிகவும் கவனம் பெற்ற ஒரு நாடாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் சிவில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் பகுதி இரண்டாக ஓர் அவசரநிலைச் சட்ட ஏற்பாடாக 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படும் பிடிஏ நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையான காரணங்களின்றி முஸ்லிம்களையும் தமிழர்களையும் தடுத்துவைப்பதற்கும் சித்திரவதையினைப் பயன்படுத்திப் போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கும் இந்தப் பயங்கரமான சட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய மொபைல் கையொப்பப் பிரச்சாரத்திற்கு நானும் கௌரவ எம் ஏ சுமந்திரனும் தலைமை தாங்கினோம். இந்தப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பிரசைகளும் செயற்பாட்டாளர்களும் எஸ்எல்பிபி தவிர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
நாட்டின் குறிப்பிட்ட பிரிவினராலும் சர்வதேச சமூகத்தினாலும் இந்தச் சட்டவாக்கம் மீண்டும் மீண்டும் கண்டிக்கப்பட்ட போதிலும் இதனை நீக்குவதற்கு இலங்கை தவறிவிட்டது. கடந்த வருடம் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து வைப்பதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியமை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுடன் சேர்ந்து அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் மற்றும் கனேடியப் பிரதிநிதிகள் அவர்களின் கரிசணைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த வருடம் ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட டிவீட்டில், ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் தாம் கரிசணை கொண்டுள்ளதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டின் மீது நடப்பின் படி உண்மையான இடைநிறுத்தம் பற்றிச் சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறான உத்தரவாதங்களையும் தாண்டி, நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வில் வைத்து 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் பிரஜைகளை அடக்கியொடுக்கும் அதேவேளை நல்லிணக்கம் பற்றியும் உண்மை
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (டிஆர்சி) பற்றியும் பேசுவதன் மூலம் அரசாங்கம் சர்வதேச
சமுதாயத்தினையும் மனித உரிமைகள் கவுன்சிலையும் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றதா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |