மட்டக்களப்பில் கப்பம் கோரிய இராணுவ மேஜர்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மட்டக்களப்பில் நபர் ஒருவரிடம் 3 இலட்சம் கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, நேற்று திங்கட்கிழமை (06.05.2024) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பை சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடைத்தரகர் என தன்னை அடையாளப்படுத்தி ஒருவரிடம் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு
அத்துடன், 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த இடைத்தரகருக்கு எதிராக மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாமின் மேஜர், இடைத்தரகரான ரங்கனிடம் கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்முனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |