கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞருக்கு எதிராகச் சட்டம் பாயும்: டிரான் அலஸ்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) முரண்பட்டு, தவறான நிலைப்பாட்டைச் சமூகமயப்படுத்திய இளைஞனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (06.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
"கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசா விநியோகப் பிரிவில் கடந்த 01ஆம் திகதி அமைதியற்ற தன்மை நிலவியது.
விமான நிலையத்தின் வளாகத்தில் ஆவேசமாக முரண்பட்ட இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது தற்போதைய பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசா விநியோகிக்கும் பொறுப்பு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தவறான நிலைப்பாடு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் கடந்த 01ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா விநியோகப் பிரிவுக்குத் தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார். இவரது மனைவிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
வி.எப்.எஸ். குளோபல் நிறுவனத்துடனான இரு தரப்பு சேவை கடந்த 01ஆம் திகதி ஆரம்பமானபோது கட்டார் நாட்டில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைக் காரியாலயத்தின் உப தலைவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்து, பணிச் செயற்பாடுகளைப் பார்வையிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதன்போது இந்த இளைஞர் அவரிடம் சென்று தனது மனைவிக்கு விசா பெற்றுக்கொள்வது பற்றிப் பேசியுள்ளார்.
விசா விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ததன் பின்னர் வி.எப்.எஸ். குளோபல் நிறுவனத்தின் கிளை காரியாலயத்தின் உப தலைவர், இந்த இளைஞரை வரிசையில் நிற்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே இவர் இந்தியர்கள் இங்கு உள்ளார்கள் என்று முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்.
விசா விநியோகப் பிரிவில் இந்தியர்கள் எவரும் பணியில் இருக்கவில்லை. 13 இலங்கையர்களே சேவையில் இருந்துள்ளார்கள்.
இந்தியர்கள் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினர் அனைவரும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வாங்குவதை மறுக்கவில்லை.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருசில அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |