நிலக்கரி கொள்வனவிற்கான கேள்விப்பத்திரத்தை கோரியுள்ள லங்கா நிலக்கரி நிறுவனம்
லங்கா நிலக்கரி நிறுவனம் (LCC) நீண்ட கால கடன் வசதியின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 4.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரத்தை கோரியுள்ளது.
இதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஜூலை 18 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேள்விப்பத்திரங்களுக்கான கடைசி திகதி, ஆகஸ்ட் 10 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி நிறுவனத்திடம் உள்ள கையிருப்பு
பெரியளவிலான நிலக்கரியை கொள்வனவு செய்வதால், நல்ல விலை மற்றும் கடன் வசதிகள் கிடைக்கும் என்று நிறுவனம் நம்புவதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிறுவனத்திடம் உள்ள கையிருப்பு அக்டோபர் முதல் வாரம் வரையே போதுமானதாக இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த திட்டத்திற்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (CEBEU) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
உலகச்சந்தை விலைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருவதால், இந்த நீண்ட கால கொள்முதல் திட்டத்தால் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்ச்சைக்குரிய லிட்ரோ எரிவாயு கொள்முதல்
மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கம் இந்த கேள்விப்பத்திரதை, சர்ச்சைக்குரிய லிட்ரோ எரிவாயு கொள்முதலுடன் ஒப்பிட்டுள்ளது.
முன்னதாக, லிட்ரோ கேஸ் நிறுவனம் 96 அமெரிக்க டொலர் என்ற குறைந்த ஏலத்தை நிராகரித்து, எனினும் இறுதியில் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஒரு மெட்ரிக் தொன், 129 டொலர்கள் என்ற விலையில் வாங்கியதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரை நிலக்கரி வழங்குவதற்கான கேள்விப்பத்திரங்களை அழைப்பதற்கு இது பொருத்தமான நேரம் என்று தாம் நம்பவில்லை. இதன் அடிப்படையில், ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை 350-370 அமெரிக்க டொலர்கள் வரையான விலையிலேயே கிடைக்கும்.
எனினும் ஒரு மெட்ரிக் தொன் ரஷ்ய நிலக்கரியை 200 அமெரிக்க டொருக்கும் குறைவான
விலையில் வாங்க முடியும். எனவே ரஷ்ய நிலக்கரியை குறைந்த விலையில் வாங்குவதற்கு
ஏன் முயற்சி எடுக்கவில்லை என்று மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கம் கேள்வி
எழுப்பியுள்ளது.