உலக முடிவு பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்துள்ளார்.
உலக முடிவு பகுதியினை பார்வையிட வந்த பல்கலைக்கழக மாணவர் குழுவினர், நேற்று காலை சுமார் 9.00 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த நிலையில், செல்ஃபி எடுக்க முயன்றபோது மாணவி தவறி விழுந்துள்ளார்.
உயிருடன் மீட்பு
இதன்போது 50 அடி பள்ளத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாணவி பல மணிநேரப் போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

பட்டிப்பொல பொலிஸார், இராணுவத்தின் 3ஆவது சிங்கப் படைப்பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காப்பற்றாட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


