தேங்காயின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்
தேங்காய்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் முனைப்பு தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உள்ளூர் சந்தையில் தேங்காய்க்கான நிரம்பலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெங்குத்துறை சார்ந்தோர் நம்புகின்றனர்.
இதேவேளை, இறக்குமதி தாமதமானால் தேங்காயின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேங்காய்களுக்கு பற்றாக்குறை
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்துள்ள இலங்கை தெங்கு தொழில்கள் துறை தலைவர் ஜெயந்த சமரக்கோன், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
2021 முதல் 2024 வரையான காலப்பகுதியில், இலங்கையில் ஏற்கனவே 700 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் குறைந்துள்ளன.
இந்தநிலையில் தேங்காய் இறக்குமதிக்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அமைச்சரவைப் பத்திரம் தாமதமானால், நுகர்வோர் தேங்காய்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சமரக்கோன் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் தேங்காய்கள் 150இல் இருந்து 200 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இறக்குமதி தாமதமானால், அவற்றின் விலை 250 - 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அவர் எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தெங்கு உற்பத்தியை மேம்படுத்த, 50 கிலோ உரத்தின் விலையை 9000 இலிருந்து 4000 ரூபாயாக குறைக்கவேண்டும் என்று இலங்கை தெங்கு தொழில்கள் துறை தலைவர் ஜெயந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார். புதிய பாதீட்டின் கீழ் அரசாங்கம், இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.