தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் மோதல்
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக மணிலா குற்றம் சாட்டியுள்ளது.
பஜாவான் மாகாணக் கரைக்கு அப்பால் உள்ள சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் பயணித்த ‘பி.ஆர்.பி டட்டு மகத் சலமத்’ என்ற பிலிப்பைன்ஸ் மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் கப்பல் மீது, சீனக் கப்பல் அபாயகரமான முறையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு மோதியதாக பிலிப்பைன்ஸ் கடற்கரை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள்
உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலினால் பிலிப்பைன்ஸ் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இக் குற்றச்சாட்டை சீனா முற்றாக மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பலே எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றிச் சீனக் கப்பலுக்கு முன்பாக அதிவேகமாக வந்தமையினாலேயே இச்சேதம் ஏற்பட்டதாகச் சீன வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரிவரும் சீனாவிற்கும், அப் பகுதியைத் தனது எல்லைக்குட்பட்டதாகக் கருதும் பிலிப்பைன்ஸிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக இவ்வாறான தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.