சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை
எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.
வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்
அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பிடியாணை
அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
you may like this