சவூதியில் கைது இலங்கை இளைஞன் அனோஜனுக்கு வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதனை இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அனோஜனின் மரண தண்டனை
இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில், கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக தகவல்- பவன்