அமெரிக்காவின் கடும் அழுத்தத்தால் சீனாவின் டிஜிட்டல் வணிகத் திட்டம் முடக்கம்
உலகளாவிய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காகச் சீனா உருவாக்கிய 'லோஜின்ங்க்' எனும் டிஜிட்டல் தளம், அமெரிக்காவின் தீவிர அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாகச் சர்வதேச அளவில் முற்றாக முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் இந்தத் தளம், சர்வதேச அளவில் துறைமுகங்கள், சுங்கத் திணைக்களங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் தரவுகளை ஒன்றிணைத்து நிர்வகிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
எனினும், இத்தொழில்நுட்பத்தின் மூலம் உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலி மற்றும் இராணுவ நகர்வுகளைச் சீனா உளவு பார்க்கக்கூடும் என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கவலை வெளியிட்டிருந்தன.
கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கூட்டமைப்புக்கள் இத்தளத்துடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளன.
அத்துடன், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான தரவுப் பகிர்வு ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவில் உள்ள இதன் பிரதான தலைமையகம் கைவிடப்பட்ட நிலையில் காலியாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலுவைக் கட்டணங்கள் மற்றும் ஊழியர் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பில் பல சட்டப் போராட்டங்களையும் இத்திட்டம் எதிர்கொண்டு வருகின்றது.
அமெரிக்காவின் திட்டமிட்ட தலையீடு காரணமாகச் உலக வர்த்தகத் தரவுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த சீனாவின் முயற்சிக்கு இது பாரிய பின்னடைவாகக் கருதப்படுகின்றது.